மாத்தளைப் பகுதியில் அமைந்துள்ள எல்கடுவ தமிழ் மகா வித்தியாலயத்திற்கு, மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒலியமைப்பு தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த உதவித்திட்டம் கிரிவலம் அறக்கட்டளை மற்றும் மலையக விடிவெள்ளி அமைப்பு ஆகியோரின் இணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் அதிபர் திரு. மாணிக்கம் தியாகராஜன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பல தொடர்புகளின் பின்னர் இந்த ஒலியமைப்பு தொகுதி பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பாடசாலையின் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இந்த ஒலியமைப்பு தொகுதி பெரும் பயனுள்ளதாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.
நிகழ்வில் கிரிவலம் அறக்கட்டளையின் தலைவர், பொருளாளர் கே.டி. பாரதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுஷாந்தகுமார் மற்றும் மலையக விடிவெள்ளி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிரிவலம் அறக்கட்டளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பின்தங்கியுள்ள தேவையுள்ள பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் எல்கடுவ பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைச் சூழல் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து ஆதரவளிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாடசாலையின் தகவல் தொழில்நுட்பக் கற்றலை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய கணினிகளுக்குப் பதிலாக மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக குறைந்தது இரண்டு புதிய கணினிகளை வழங்குமாறு பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படும் ஒவ்வொரு உதவியும், அவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஒரு முக்கியமான முதலீடாகும்.
நிகழ்வின் முழுமையான காணொளியைப் பார்வையிட: மீண்டும் மலையகத்தில் நாங்கள் பாடசாலைகளை நோக்கி















