கிளி/ புனித அந்தோனியார் ரோமன் தமிழ் கலவன் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் விளையாட்டுத் திறன்கள், உடல் ஆரோக்கியம், தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் ஆளுமை விருத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலைக் கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் ஒலிம்பிக் சுடர் ஏற்றுதல் இடம்பெற்றதுடன், மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். பாடசாலை மைதான வசதிகள் குறைவாக இருந்தபோதிலும், மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. விளையாட்டின் மூலம் மாணவர்களின் உடல் இயக்கத் திறன், ஆளுமை, ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் திறமையாகப் பங்கேற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கிரிவலம் அறக்கட்டளையின் இணைப்பாளர்களான திரு. கே.டி. பாரதி மற்றும் திருமதி தவகலா, பன்னங்கண்டி கிராம அலுவலர் திருமதி தனுஷா ஜனசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழ் பிரியா ரவிசங்கர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு கிரிவலம் அறக்கட்டளை ரூ.50,000 நிதியுதவியை வழங்கியது. பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் அறக்கட்டளையின் இப்பங்களிப்புக்கு பாடசாலை சமூகம் தனது நன்றியைத் தெரிவித்தது.
கிரிவலம் அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதுடன், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறது. மேலும், வவுனியா வடக்கு பகுதிகளில் உள்ள 94 முன்பள்ளிகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அறக்கட்டளை ஆதரவளித்துள்ளதாக அதன் இணைப்பாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: மாபெரும் விளையாட்டுப் போட்டி உதவிய கிரிவலம் அறக்கட்டளை















































