மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், கிரிவலம் அறக்கட்டளை சார்பில் மா/ திருவள்ளுவர் தமிழ் வித்யாலயத்திற்கு பெறுமதியான மடிக்கணினி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சுமார் 200–220 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் வளப்பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப வளங்களைப் பெற்றுக்கொள்வதில் பாடசாலை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பாடசாலையில் இதுவரை போதுமான கணினி மற்றும் மல்டிமீடியா வசதிகள் இல்லாத நிலை குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், கிரிவலம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட மடிக்கணினி மாணவர்களின் தகவல் தொழில்நுட்பக் கல்வி, கற்றல் செயற்பாடுகள் மற்றும் திறன் விருத்திக்கு பயனுள்ளதாக அமையும். குறிப்பாக தரம் 6 முதல் 11 வரையான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் இதனைப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மடிக்கணினியின் பெறுமதி சுமார் ரூ. 2.5 இலட்சத்திற்கும் அதிகம் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து அறக்கட்டளையின் தலைவர் வழங்கிய நிதி ஆதரவின் மூலம் இவ்வுதவி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. எஸ். சிவனேஸ்வர் ராஜா, உதவி அதிபர் திருமதி எம். சுகந்தனி, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கிரிவலம் அறக்கட்டளையின் பிரதிநிதிகளான கே. டி. பாரதி மற்றும் அனுஷாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கற்றலில் மாற்றத்தை ஏற்படுத்தும் இவ்வுதவிக்காக, திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் சார்பில் கிரிவலம் அறக்கட்டளைக்கும் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
கிரிவலம் அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், மாதந்தோறும் ரூ. 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை சமூக நலச் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. இதில் கல்விக்கான உதவிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு வழங்கப்படுகின்றது.
மேலும், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் அறக்கட்டளை தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றது. சுமார் எட்டு மாணவர்கள் இவ்வாறான உதவியின் மூலம் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: மீண்டும் மலையகததுக்குள் நுழைந்த அறக்கட்டளை பாராட்டிய அதிபர்























