அம்பாள் குளம் பகுதியில் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொண்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு, கிரிவலம் அறக்கட்டளையின் சார்பில் புதிய துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
யுத்த காலத்தில் தந்தையை இழந்த குறித்த குடும்பத்தில், தாயுடன் வசித்து வரும் மாணவர் தற்போது 10ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கர வண்டி தேவைப்படுவதாக குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், கிரிவலம் அறக்கட்டளையின் தலைவர் உடனடியாக இந்த உதவியை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இந்த உதவி, ரத்தினபுரி “உதவும் கரங்கள்” அமைப்பின் தலைவர் திரு. ரமேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கிரிவலம் அறக்கட்டளையின் தலைவரின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சமூக நலனில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு. ரமேஷ் அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையிலும் இந்த உதவி முன்னெடுக்கப்பட்டது.
துவிச்சக்கர வண்டியைப் பெற்றுக்கொண்ட மாணவர் மற்றும் அவரது தாயார், கிரிவலம் அறக்கட்டளையின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். பாடசாலைக்கு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலையில், இந்த துவிச்சக்கர வண்டி தனது கல்விப் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என மாணவர் தெரிவித்தார்.
கிரிவலம் அறக்கட்டளை, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், புத்தகங்கள், கொப்பிகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் கல்வி சார்ந்த செலவுகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தட்டுவன்கொட்டி பகுதியில் இலவசக் கல்வி வழங்கும் கல்வி நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல பகுதிகளில் இத்தகைய கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவரின் எதிர்கால கல்விக்கும் தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு கிரிவலம் அறக்கட்டளை தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மாணவர் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் காலப்பகுதியில் அவரது கல்வி தொடர்பான செலவுகளுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவரிடம் துவிச்சக்கர வண்டியை பொறுப்புடன் பாதுகாத்து, அதனைத் தனது சொந்த உடைமையாகக் கருதி பயன்படுத்துமாறும், நன்றாகக் கல்வி கற்று நல்ல பிரஜையாக உருவாகுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: (308) அப்பாவை இழந்த மாணவனுக்கு கிரிவலம் அறக்கட்டளையால் கிடைத்த உதவி – YouTube


