தட்டுவன் கொட்டிப் பகுதியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கிரிவலம் அறக்கட்டளையினால் மாலைநேர இலவசக் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கிராமமாக உள்ள இப்பகுதியில், மாணவர்கள் மேலதிக கல்விக்காக சுமார் 15 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதுடன், போக்குவரத்து வசதியின்மை மற்றும் பொருளாதார சிரமங்களும் காணப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு, கிராமத்திலேயே பாதுகாப்பான முறையில் மேலதிக கல்வியை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கிரிவலம் அறக்கட்டளையின் பணிப்பாளர் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து, மாணவர்களின் கற்றல் உபகரணங்கள், நூலக வசதிகள் மற்றும் மாலை நேரக்கல்வி வகுப்புகளுக்கான ஆசிரியர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளார். தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை கிரிவலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருவதாகவும், கிராம சேவையாளர்கள், கல்வித் திணைக்களம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலவசமாக வழங்கப்படும் இந்த மாலை நேரக்கல்வி வாய்ப்பை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் கிராம சமூகத்தினர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிகழ்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் முழுமையான காணொளியைப் பார்வையிட: ஆணையிறவு தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு புலம் பெயர் உறவின் செயலால் மகிழ்ச்சியில் மக்கள்


























